நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் ஒரே ஆண்டில் இரண்டு உலக கோப்பைகளை இந்தியாவிடமிருந்து தட்டி பறித்துள்ளது.
நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை தட்டி சென்றது. இந்த உலக கோப்பையில் ஆரம்பம் முதலே ஒரு போட்டியில் கூட இந்தியா தோல்வி அடையாமல் விளையாடியதால் உலக கோப்பையை இந்தியா வெல்லும் என்ற பெரும் நம்பிக்கை இருந்தது.
ஆனால் அதை பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சுக்குநூறாக உடைத்தது. நேற்றைய ஆஸ்திரேலிய அணி வெற்றியில் முக்கிய காரணமாக இருந்தவர் ட்ராவிஸ் ஹெட். முதல் 7 ஓவர்களுக்கும் மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் ஆட்டத்தின் முடிவு வரை நின்று பொறுமையாக விளையாடி 120 பந்துகளில் 15 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என மொத்தம் 137 ரன்களை குவித்து இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
இதேபோல கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதம் வீழ்த்தி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதன்மூலம் ஒரே ஆண்டில் இந்தியாவின் இரண்டு உலக கோப்பை கனவுகளை ட்ராவிஸ் ஹெட் தடுத்து நிறுத்தியுள்ளார்.