இந்திய கிரிக்கெட்டின் இளம் சென்சேஷனல் வீரரான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி அடுத்தடுத்து அதிரடி இன்னிங்ஸ்கள் மூலமாக கவனம் ஈர்த்து வருகிறார். இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக அவர் 30 பந்துகளில் அடித்த சாதனை சதம் ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான தருணமாக இடம் பிடித்தது.
இதையடுத்து அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்க்கப்பட்டு இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த போட்டியில் 52 பந்துகளில் சதமடித்த அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் வெகு விரைவாகவே சூர்யவன்ஷி அறிமுகமாகி கலக்குவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் தன் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அச்சாரமிடும் விதமாக மற்றொரு இன்னிங்ஸையும் ஆடியுள்ளார். இந்தியா ஏ அணிக்காக UAE அணிக்கு எதிரானப் போட்டியில் 32 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். இந்த இன்னிங்ஸில் 44 பந்துகளில் 144 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களும் அடக்கம். இந்த போட்டியில் 20 ஓவர்களில் 298 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய UAE அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.