ஐபிஎல் 17 ஆவது சீசனில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததின் மூலம் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. கோப்பைக்காக காத்திருக்கும் அந்த அணியின் நிறைவேறாக் கனவு இன்னும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டது.
இந்த போட்டிக்குப் பிறகு அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.
இதையடுத்து ஆர் சி பி வீரர் கோலி தினேஷ் கார்த்திக் பற்றி நெகிழ்ச்சியான ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் முதல் முதலாக 2009 ஆம் ஆண்டு அவரை சந்தித்த போது அவரை ஹைபர் ஆக்டிவ்வானவர் என நினைத்தேன். ஒரு இடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருப்பார். இப்போது அமைதியாகிவிட்டார். ஆனால் அதே திறமை இன்னமும் அவரிடம் உள்ளது.
அவருடனான உரையாடல்களை நான் ரசித்துள்ளேன். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் மோசமானதாக அமைந்தது. அப்போது நான் தன்னம்பிகை இல்லாமல் தவித்தேன். அப்போது அவர் என்னை அழைத்து உரையாடினார். விஷயங்களை தான் எப்படி அணுகுவேன் என்பது குறித்து பேசி விளக்கினார். அது எனக்கு உதவியாக இருந்தது. இந்த அக்கறைதான் அவரை நேசிக்க வைத்தது” எனப் பேசியுள்ளார்.