சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டி பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. கடைசி ஓவர் த்ரில்லராக முடிந்தது. பஞ்சாப் அணி நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை ஆர் சி பி அணி கடைசி 4 பந்துகள் மிச்சமிருக்க எட்டியது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். இதில் 11 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடக்கம். இந்த சிறப்பான இன்னிங்ஸ் மூலம் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் கோலி பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது ஒரு ரசிகர் ஆர்வமிகுதியில் மைதானத்தின் உள்ளே புகுந்து அவர் காலில் விழுந்தார். ரசிகர்கள் இதுபோல தங்கள் ஆஸ்தான வீரர்களைக் காண அத்துமீறுவது கிரிக்கெட்டில் சாதாரணமாக நடப்பதுதான்.
இந்நிலையில் அந்த ரசிகரை மைதானத்தில் இழுத்து சென்ற மைதான ஊழியர்கள் அவரை ஒரு இடத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசியில் அவரை ஊழியர்களிடம் இருந்து போலீஸார் அழைத்துச் செல்கின்றனர். இது சம்மந்தமான வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. சம்மந்தப்பட்ட ரசிகர் தவறு செய்திருந்தாலும் அவரை எப்படி ஊழியர்கள் தாக்கலாம். அவரைக் காவல்துறையினரிடம்தானே ஒப்படைக்க வேண்டும் என கண்டனங்கள் எழுந்துள்ளன.