இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 போட்டி நேற்று கௌகாத்தியில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணி ருத்துராஜின் அபாரமான சதத்தின் மூலம் 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
இதையடுத்துக் களமிறங்கிய ஆஸி அணியும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வேல் கடைசி வரை களத்தில் நின்று 48 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து அந்த அணியை வெற்றி பெறவைத்தார். இதன் மூலம் கடைசி பந்தில் ஆஸி அணி இலக்கை எட்டி தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த தோல்வி குறித்து போட்டி முடிந்ததும் பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் “இந்த போட்டியில் மேக்ஸ்வெல் இறங்கியதில் இருந்து அவரின் விக்கெட்டை எடுப்பதுதான் எங்கள் இலக்காக இருந்தது. டிரிங்ஸ் இடைவேளையில் கூட பவுலர்களிடம் மேக்ஸ்வெல் விக்கெட்டை விரைவாக வீழ்த்தவேண்டும் என்றுதான் கூறினேன். ஆனால் அது கடைசி வரை நடக்கவில்லை. இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் வீரர்களின் ஆட்டம் எனக்கு பெருமையளிக்கும் விதமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.