நேற்று நடந்த பரபரப்பான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற்றது. குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து 199 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதனால் அந்த அணி தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில் அந்த அணியின் பின் வரிசை வீரரான ஷஷாங்க் சிங் அதிரடியாக ஆடி அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் 29 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இந்த ஷஷாங்க் பற்றி சுவாரஸ்யமான பின்கதை ஒன்று உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஏலத்தின் போது பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் எடுத்த பின்னர் தாங்கள் எடுக்க விரும்பிய வீரர் இவர் இல்லை. இதே பெயர் கொண்ட வேறு ஒருவரை எடுப்பதற்குப் பதில் இவரை எடுத்துவிட்டோம் எனக் கூறியது. ஆனால் ஏலத்தில் அவரை மாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் முக்கியமான ஒரு போட்டியில் அணியைக் காப்பாற்றியுள்ளார்.