இந்திய அணி இந்த முறை டி 20 உலகக்கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற ஆசை இந்தியா முழுவதும் உள்ளது.
உலகக்கோப்பைக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் அணிகளின் செயல்பாடு மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஆகியவை பற்றி கணித்து கூறி வருகின்றனர்.
அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான வாசிம் அக்ரம் அரையிறுதிக்கு செல்லும் மூன்று அணிகள் என இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான்காவது அணியாக தென்னாப்பிரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்திய அணி டாப் 4 அணிகளுக்குள் வர 30 சதவீத வாய்ப்புகள்தான் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் “ஒரு அணிக்கு ஆல்ரவுண்டர்கள்தான் மிக முக்கியம். இப்போது இந்திய அணியில் அப்படி ஒரு வீரராக ஹர்திக் பாண்ட்யா மட்டுமே உள்ளார்” எனக் கூறியுள்ளார்.
மற்றொரு முன்னாள் வீரரான ஜாகீர் கான் இந்திய அணி இறுதிப்போட்டிக்கே செல்லும் என நம்பிக்கையாக கூறியுள்ளார். மேலும் அவர் பூம்ரா, ஜடேஜா இல்லாதது இழப்புதான் என்றாலும், இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடியுள்ளது. அதனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் எனக் கூறியுள்ளார்.