ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் பிரண்ட்டன் டெய்லர் சூதாட்ட புகாரில் சிக்கி ஐசிசி விசாரணையில் உள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரண்ட்டன் டெய்லர். இவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை சர்வதேசக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தொழிலதிபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ஜிம்பாப்வே டி 20 போட்டிகள் நடத்துவதற்கு ஸ்பான்சர் செய்வதாக என்னை இந்தியாவுக்கு அழைத்தார். அப்போது நான் ஒரு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டேன். எனக்கு மது மற்றும் கொக்கைன் அளிக்கப்பட்டது. என் துரதிர்ஷ்டம் நான் கொக்கைன் எடுத்துக் கொண்டேன். ஆனால் மறுநாள் காலை நான் கொக்கைன் எடுத்துக் கொள்வதை வீடியோவாக என்னிடம் காட்டி நான் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என்றால் வீடியோவை வெளியே விடுவோம் என மிரட்டினர்.
நான் பயந்துபோனதால் எப்படியாவது நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதால் அவர்களிடம் சம்மதம் சொல்லி திரும்பினேன். நான் உடனடியாக இதுபற்றி ஐசிசியிடம் புகார் அளிக்கவில்லை. நான்கு மாதம் எனது குடும்பத்தின் பாதுகாப்பு காரணமாக தாமதமாக்கினான். அதை ஐசிசி புரிந்துகொள்ளுமென நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது ஐசிசி எனக்கு நீண்ட கால தடை விதிக்கும் முடிவில் உள்ளது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் ஒரு முறை கூட சூதாட்டத்தில் ஈடுபட்டதில்லை. என் கதை மற்ற வீரர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் எனக் கூறியுள்ளார்.