உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்றுடன் முடிவு பெறும் நிலையில், அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
இன்று உலகக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவுடன் இலங்கை அணியும், ஆஸ்திரேலியாவுடன் தென் ஆப்ரிக்கா அணியும் மோதுகின்றன. இந்திய அணி 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகளை பெற்று புள்ளி விவரப்பட்டிகளில் 2-ஆவது இடத்தில் உள்ளது.
எனினும் அரையிறுதிச் சுற்றுக்கு ஏற்கனவே இந்திய அணி முன்னேறி விட்ட நிலையில், இன்று நடக்கவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் முடிவு இந்தியாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்கா அணியிடம் தோற்றால் புள்ளி விவரப்பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும். அவ்வாறு நடந்தால் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்துடன் மோதும். ஒரு வேலை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதும்.
ஆஸ்திரேலியா புள்ளிவிவரப் பட்டியலில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிளுடன் தற்போது முதலிடத்தில் உள்ளது. ஆனால் தென் ஆப்ரிக்கா அணி 2 போட்டிகளில் வென்று 5 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் உள்ளது.
இதனடிப்படையில் ஆஸ்திரேலிய அணி பலமாக உள்ளதால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆதலால் அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதலாம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இங்கிலாந்துடன் இந்திய அணி மோதினால் அந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனவும் ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.