அது கடல் கொண்ட குமரியின் காலம். சாதி மதங்கள் அற்று தமிழன் இயற்கையை மட்டும் வணங்கிய காலம். பிறகு தான் ஆரியர்கள் வந்தார்கள். இதிகாசங்கள் எழுதப்பட்டன. கடவுளும், வழிபடும் கோட்பாடுகளும் வகுக்கப் பட்டன. சாதியின் பெயரால், செய்யும் தொழிலின் அடிப்படையில் மனிதன் பிரித்து வைக்கப்பட்டிருந்தான். குலங்களாகவும் கோத்திரங்களாகவும் பிரித்து வைக்கப்பட்டிருந்த தமிழனை, அரசுகள் ஆள்வதும் அவனை உறிஞ்சுவதும் எளிதாக இருந்தது.
நிச்சயம் இது யுகப்புரட்சிதான் ஜல்லிக்கட்டு போராட்டம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தமிழன் சாதி, மத, பேதமின்றி திரண்டான். அரசுகள் அஞ்சின.
மத்திய அரசு அஞ்சியது! நாளையே இதைப் போன்று பெட்ரோல் டீசல் உயர்வுக்கு எதிராக, நீட் தேர்வுக்கு எதிராக, தேசிய பிரச்சனைகளுக்கு எதிராக ஒரு மெட்ரோ சிட்டியில் பெரும் மாணவர்கள் திரள் திரண்டால் என்ன செய்வது?
மாநில அரசு அஞ்சியது! நாளையே இதைப் போன்று டாஸ்மாக் எதிராக, தாது மணல் கொள்ளைக்கு எதிராக, அரசின் ஊழலுக்கு எதிராக, மெரீனாவில் பெரும் மாணவர்கள் திரள் திரண்டால் என்ன செய்வது?
கார்பரேட்கள் அஞ்சியது! நாளையே இதைப் போன்று இந்தியாவில் அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பு நடந்து விடுமோ? அதனால் தங்களின் வணிக வாய்ப்புகள் போய் விடுமோ என்று?
மத்திய, மாநில அரசுகள், தமிழர்களின் இந்த தன்னெழுச்சியை கடும் கரங்கள் கொண்டு ஒடுக்க ஒழிக்க நினைத்தன. திட்டங்கள் வகுக்கப்பட்டன. வியூக விற்பன்னர்கள் தமிழர்களின் வரலாற்றை முழுமையாக அலசி ஆராய்ந்து தமிழனை வீரத்தால் களத்தில் வீழ்த்த முடியாது, சூழ்ச்சியாலும் சிறுமதியாலும் மட்டுமே வெல்ல முடியும் என்ற முடிவுக்கு வந்தன
கட்ட பொம்மன் வீர வரலாற்றில் வரும் எட்டப்பனைப் போல் அவர்களுக்கு கிடைத்த எட்டப்பன் தான் இந்த ஹிப் ஹாப் தமிழன் ஆதி என்னும் சீட்டு. மிகப்பெரும் ஜனத் திரளை உடைக்க, மனிதத் தேனீக்களின் கூட்டை கலைக்க அரசுகளால் வீசப்பட்ட விஷக்கல் தான் இந்த ஆதி. போலீசின் தடியடிகளுக்கு சில வார்த்தைகளும் வாக்குமூலங்களும் தேவைப்பட்டன. அது தான் ஆதியின் whatsapp வாக்குமூலங்கள். இஸ்லாமியர்கள், கருப்பு கார், இந்திய இறையாண்மை எதிராக பேசினார்கள், தேச விரோதிகள், சமூக விரோதிகள் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள். ஆதியின் வாக்குமூலங்களையும், வார்த்தை ஜாலங்களையும் வைத்து கொண்டு போலீஸ் போட்ட பேய் ஆட்டம் நாடு அறியும்.
பெண்கள் என்றும் முதியவர்கள் என்றும் பாராமல் தடியடி, ஆட்டோவை கொளுத்தும் போலீஸ், செங்கற்களை வீசும் போலீஸ், பெண்களை கொடூரமாக தாக்கும் போலீஸ், குடிசைகளை கொளுத்தும் போலீஸ், 200 மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் என அவர்களின் வெறியாட்டத்தை பார்த்து நாடே அஞ்சியது. நடுக்குப்பம் மீன் மார்க்கெட் பற்றி ஆதிக்கு தெரியுமா என்ன? தெரிந்தாலும் வாய்த் திறக்க மாட்டார். காரணம் விற்பன்னர்களின் சகுனி சொக்கட்டான் தான் இந்த ஆதி.
மகாபாரத்தில் கர்ணணை வீழ்த்தியதில் தேரோட்டி செல்லியனுக்கு பெரும் பங்கு உள்ளது. அதுபோலதான் நம் ஆதி. தேரோட்டியவர் தன் சிறு மதியாலும், சூழ்ச்சியாலும், தேரிலிருந்து இறங்கி லட்சோப லட்ச கர்ணண்களை தற்காலிகமாக வீழ்த்தி இருக்கிறார்.
யூதாசும் ஆதியும்
ஏசுவை காட்டிக் கொடுத்து 30 வெள்ளி நாணயங்களைப் பெற்ற யூதாசு போல ஆதிக்கும் சில பல விருதுகள், முதல்வரின் பிரதமரின் பாராட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
சரித்திர வெற்றிகளை எழுதும் போது எட்டப்பன்களையும், சகுனிகளையும், யூதாசுகளையும் பற்றி எழுதும் போது தான் அது சுவைக்கின்றது. தமிழன் என்ற இனம் உண்டு தனியே அவருக்கு ஒரு குணம் உண்டு அது தான் ஜல்லிக்கட்டு தன்னெழுச்சி போராட்டம். எட்டப்பன்கள் சகுனிகள் யூதாசுகள் அவர்களுக்கும் ஒரு வரலாறு உண்டு அது தான் துரோகத்தின் வரலாறு. இறுதியாக ஆதி அவர்களே! ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் உங்களின் சொல் தமிழர்களின் தன்னெழுச்சியை தற்காலிகமாக தடுத்து இருக்கிறது.