கடந்த 3 மாதங்களில் ஆட்டோமொபைல்ஸ் துறையில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக வாகனங்களின் விற்பனையில் பலமான வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் விளைவாக கடந்த மூன்று மாதங்களில் இரண்டு லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக இந்திய வாகன டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லாததால் இன்னும் பலரும் வேலை இழக்க வேண்டி இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக, விற்பனை ஊழியர்கள் கணிசமான அளவில் பணிகளை இழந்துள்ளனர். ஆனால் இந்த நெருக்கடி இதேபோல தொடர்ந்தால் தொழில்நுட்ப ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் பல ஷோரூம்களை மூடவேண்டிய நிலை வரும் என இந்திய வாகன டீலர்கள் சங்கத் தலைவர் ஆஷிஷ் ஹர்ஷராஜ் காலே தெரிவித்துள்ளார்.