அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் விரும்பி உண்ணப்படுகிறது. அவரைக்காய் நல்ல சுவையைக் கொண்டது.
எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
அவரைப் பிஞ்சுகளை நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்து சாப்பிடும் காலத்திலும், விரதம் இருக்கும் காலத்திலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும்.
அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும். அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும். அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
இது சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும். முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப்பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளை அவரை குறைக்கும். இரவு உணவில் அவரைக்காயைச் சேர்த்துக் கொண்டால் நல்ல உறக்கத்துக்கு உத்தரவாதமாகும்.