சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான தொடர் இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.
நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும். இதனை போக்க சில எளிய பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவ குறிப்புக்களை பார்ப்போம். சளி, இருமல், காய்ச்சல் அதிகமாகி குழந்தை மூச்சு விட சிரமப்பட்டு, உணவு உட்கொள்ள சிரமப்பட்டு கொண்டு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
தூதுவளை ஒரு டீஸ்பூன் அளவு பொடியை தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். சளியின் தீவிரம் பொருத்து மூன்று வேளையும் கொடுக்கலாம். ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறுகளால் வரும் சளியினை கூட தூதுவளை வெளியேற்றும். நுரையீரலை பலப்படுத்தும்.
நெஞ்சு சளி கரைய ஆடாதோடா இலை, தேன் கலந்த மருந்து ஆடாதோடா இலைத் தளிரை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து பருகி வர நெஞ்சு சளி கரையும்..
ஓமவல்லி எனும் கற்பூரவள்ளியை சாறு எடுத்து தேனுடன் கொடுக்கலாம். கற்பூரவல்லியை நீரில் கொதிக்க வைத்து ஆறிய நீரை குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். மூக்கடைப்பு நீங்கும்.
எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு சம அளவில் எடுத்து, அதனுடன் தேன் கலந்து கொடுக்கவும். நல்ல சூடான பாலில் பனங்கற்கண்டு, மஞ்சள் தூள் சேர்த்து இரவு உறங்கும் முன் குடிக்க கொடுக்கலாம். வளர்ந்த குழந்தை எனில் மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து கொடுக்கலாம்.