பழங்கள் உடலுக்கு நன்மை தருமே தவிர, தீமை விளைவிக்காது. எந்தப் பழத்தில் என்ன சத்து உள்ளது என்ற அறிந்து கொண்டோமானால் அவற்றை சாப்பிடுவதில் பூரண நன்மை கிடைக்கும்.
ஆப்பிள்: ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் என்னும் ஆன்டிஆக்சிடண்டுகள் ஆப்பிள் பழத்தில் அதிகம் உள்ளன. இந்த ஆன்டிஆக்சிடண்டுகள் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும்.
வாழைப்பழம்: முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படுவது வாழை. எளிதாக கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் காணப்படுகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைப்பது மற்றும் மூளை செல்களில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் தன்மை ஆகியவை வாழைப்பழத்திற்கு உண்டு.
ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை அடங்கியுள்ளன. தசையியக்கம் மற்றும் செரித்தல் ஆகிய பணிகளின் திறனை உயர்த்த இவை உதவும்.
பப்பாளி: செரித்தலை ஊக்குவிக்கக்கூடிய பப்பாயின் என்னும் பொருள் இப்பழத்தில் நிறைந்துள்ளது. டிஎன்ஏ என்னும் மரபணுவின் பழுது நீக்குதல் மற்றும் தொகுப்பில் உதவக்கூடிய வைட்டமின் பி9 என்னும் ஃபோலேட் சத்தும் பப்பாளியில் உள்ளது.
எலுமிச்சை: உடம்பிலுள்ள கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ட்ரால் என்னும் ஒரு வகை கொழுப்பு ஆகியவற்றை குறைக்கக்கூடிய சிட்ரிக் அமிலம் எலுமிச்சையில் உள்ளது. கவலை, பதற்றம் மற்றும் சோர்வை குறைக்கக்கூடிய தன்மையும் இதற்கு உள்ளது.
திராட்சை: ரெஸ்வெரட்ரோல் என்னும் ஆக்சிஜனேற்ற தடுப்பான் (ஆன்டிஆக்சிடண்ட்) உடல் செல்கள் விரைவில் முதுமையடைவதையும் இதய நோயையும் தடுக்கக்கூடியது.