தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.
தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவலாம்.
வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் மினரல் வாட்டரை அடிக்கடி சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.
கோடை காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதற்கு வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிப்படியாக மறையும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.
உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிக அளவு சோப்புகளையும் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.