ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.
அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற் றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம் என்று கூறுவார்கள். நம் முன்னோர்களுக்கு இன்றைய தினம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது.
பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறு நாட்கள் உள்ளன. அவை உத்தராயண புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாள்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாட்களாகும். இந்த நாட்களில் நாம் சில பொருட்களைத் தானமாக தர வேண்டும்.
ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர் களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.