முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை திருத்தலத்தில், இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.
இங்கு முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்ததால் 'சுவாமிநாதன்' அல்லது 'சிவகுருநாதன்' என்று அழைக்கப்படுகிறார்.
திருவிழாவின் தொடக்கமாக, வள்ளி, தெய்வானை சமேத சண்முகசுவாமி எழுந்தருள, தங்க கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வேல் சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, டிசம்பர் 3-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். அன்று இரவில் சுவாமி தங்க மயில் வாகனத்தில் உலா வந்த பின்னர், திருக்கார்த்திகை தீபக்காட்சி இடம்பெறும்.