புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்கு சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும். புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். சனிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, குளித்து, பூஜை சாமான்களை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.
கலச சொம்பு: பிறகு கலச சொம்பை எடுத்து, அதற்கு நாமமிட்டு துளசி மாலை சுற்ற வேண்டும். இந்த சொம்பில் வீடு வீடாக சென்று நாராயண கோபாலா என்று சொல்லி தளுகைக்கு அரிசி கேட்க வேண்டும். இப்படி செய்வதால் நம்முடைய அகந்தை அழியும். அப்படி கொண்டு வரும் அரிசி மற்றும் பணத்தை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியங்கள் படைக்க இந்த அரிசியை தான் பயன்படுத்த வேண்டும்.
பெருமாளுக்கு படையல்: வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் இடம் பெறுவது நல்லது. சில குடும்பங்களில் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயாசம் என்று படையல் இடுவதும் வழக்கம்.
நைவேத்தியம் படைத்து பெருமாளுக்கு 9 அல்லது 11 எண்ணிக்கையில் வடை மாலை சாற்ற வேண்டும். அதன்பின் சொம்பில் நாமம் போட்டு பச்சரிசி மற்றும் சில்லறை நாணயங்களை நிரப்பி கொள்ள வேண்டும்.
துளசி தீர்த்தம் வைக்கும் பஞ்ச பாத்திரத்தில் சிறிது பச்சை கற்பூரம் மற்றும் துளசியை சேர்க்க வேண்டும். மேலும் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காயும் இடம் பெறுவது அவசியம்.
புரட்டாசி பூஜையில் மாவிளக்கு ஏற்றுவது விசேஷம். தேங்காய் உடைத்து, மாவிளக்கேற்றி, தூப தீபங்கள் காண்பித்து, சாம்பிராணி, கற்பூர ஆரத்தியை படையல் முழுவதுமாக சுற்றி எடுக்க வேண்டும்.