மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகளையும் விரதமிறுந்து அடையும் பலன்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள்...
மார்கழியில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்கிறோம். இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு ஸ்ரீவைகுண்ட நாதனே பரமபத வாசலைத் திறந்து வைத்து, அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.
எட்டு வயதுக்கு மேற்பட்டவர்களும், எண்பது வயதுக்கு உட்பட்டவர்களும் ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவை சாப்பிட வேண்டும். ஏகாதசி நாளில் முழுமையாகப் பட்டினி கிடக்க வேண்டும்.
இரவு உறங்காமல், திருமால் சரிதங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் படித்தோ அல்லது கேட்டோ இருக்க வேண்டும். மறுநாள் துவாதசியில் அதிகாலையில், கோவிந்தனின் நாமம் சொல்லி சுண்டைக்காய், நெல்லிக்கனி, எளிய அகத்திக் கீரை சேர்த்த உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
அன்றும் பகலில் உறங்காமல் இருந்து மாலை சூரியன் மறைந்த பின்தான் உறங்க வேண்டும். காயத்ரிக்கு ஈடான மந்திரமில்லை, தாய்க்குச் சமானமான தெய்வமில்லை, காசிக்கு அதிகமான தீர்த்தமில்லை, ஏகாதசிக்கு சமமான விரதமில்லை என்று அக்னி பூரணத்தில் கூறப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மேலும், சகல சௌபாக்கியங்களையும், ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெறுவார்கள்.