Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
பிரதோஷ காலம், பரமேஸ்வரனை தியானம் செய்வதற்குத் தகுந்த காலம். அதாவது ஈஸ்வரன், தன் வசப்படுத்திக் கொள்ளும் காலம் மிகவும் விசேஷமாகும். உலகம் ஒடுங்குகிறது. மனசும் ஈஸ்வரனிடம் ஒடுங்க அதுவே நல்ல நேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம் - சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கி கொள்ளும் நேரம்.
வில்லை விட்டு அம்பு சென்று விட்டாலும், மந்திர உச்சரிப்பு பலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வதுபோல ஈஸ்வரன், தான் விட்ட சக்தியை எல்லாம் தன்வசப்படுத்திக் கொள்கிறான். பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால், வேறொரு வஸ்து இல்லாத நேரமாக அது அமையும்.
உதயத்தில் சிருஷ்டியும் பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. ராத்திரி ஆரம்பத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். அதனால் இரவு நித்திய பிரளய காலமாகக் கருதப்படுகிறது. நித்திய சிருஷ்டியும், நித்திய பிரளயமும் நடக்கின்றன. பக்ஷிகள், மாடுகள் முதற்கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றன. குழந்தைகள்கூட விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஒடுங்கிக் கொள்கின்றனர்.
அந்தக் காலம்தான் சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்கு தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்திய பிரளய நேரத்தில் நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம் அதில் லயித்து விடுகிறது. அப்போது சஞ்சாரம் செய்யும் பூதப் பிசாசுகள்கூட அந்த நர்த்தனத்தில் லயித்து, யாருக்கும் உபத்திரவத்தை கொடுக்க மாட்டா. அது கண்கட்டு வித்தை போல நடக்கிறது. கூத்தாடியாருடைய கண்களையும் கட்டுவதில்லை. ஆனால், பார்த்துக் கொண்டிருக்கும் போதே நம் மனசையும் கண்களையும் வேறொன்றில் ஆகர்ஷித்துவிட்டு, தான் நினைத்ததைச் செய்து விடுகிறான்.
உஷத் காலத்தில் ஹரிஸ்மரணையும் சாயங்காலத்தில் சிவநாம ஸ்மரணையும் உகந்தவை நடராஜ மூர்த்தியின் நாமாவை உச்சாடனம் செய்வதற்கு பிரதோஷ வேளைதான் முக்கியம்.