உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவரான குவெண்டின் டொரண்டினோவின் கடைசி படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஹாலிவுட் படங்களுக்கு பெரும் ரசிக கூட்டமே இருந்தாலும், ஹாலிவுட் படங்களிலேயே கலையம்சத்துடன் கூடிய கறாரான படங்களை கொண்டாடும் ரசிகர்களும் அதிகம். அவ்வாறாக உலகம் முழுவதுமுள்ள பன்னாட்டு சினிமாக்களையும் கொண்டாடக் கூடிய ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் குவெண்டின் டொரண்டினோ. ஹாலிவுட் இயக்குனரான இவரது கில் பில் I & II, இங்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ரெசெர்வொய்ர் டாக்ஸ், ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட் உள்ளிட்ட பல படங்கள் பெரும் புகழ் பெற்றவை. கறுப்பின மக்கள் அடிமைப்படுத்தப்பட்டது குறித்து இவர் உருவாக்கிய ஜாங்கோ திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்றது.
இதுவரை 9 படங்களை இயக்கியுள்ள டொரண்டினோ தனது 10வது படத்தின் பணிகளை விரைவில் தொடங்க உள்ளார். ஒரு சினிமா விமர்சகர் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு தி மூவி க்ரிட்டிக் என பெயரியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1970களில் வாழ்ந்த பௌலின் கெல் என்ற சினிமா விமர்சகரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தன் வாழ்நாளில் 10 படங்கள் மட்டுமே இயக்குவேன் என டொரண்டினோ கூறியுள்ளதால் இந்த படம் அவரது கடைசி படமாக இருக்கும் என பேச்சு எழுந்துள்ளது.