கொரோனா வைரஸ் எதிரொலியால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் படிக்க ஆன்லைன் தளங்கள் உதவி செய்ய முன்வந்துள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு பாடத்திட்ட பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படாத சூழலில் மாணவர்கள் முழுவதுமாக படிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்படிருந்தாலும் வீட்டிலுள்ள மாணவர்கள் அடுத்த வகுப்பு செல்லும் முன் நடப்பு பாடத்திட்டங்களை முழுமையாக கற்று தேற வேண்டியது அவசியமாக உள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக படிப்பதற்கு சிறந்த கல்வி அப்ளிகேசன்கள் வாய்ப்புகளை அளித்துள்ளது. இந்தியாவில் பலரால் ஆன்லைன் கற்றலுக்காக பயன்படுத்தப்படும் பைஜூஸ் அப்ளிகேசன் தனது சேவையை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பைஜூஸ் பயன்படுத்தும் மாணவர்கள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் இறுதி வரை இந்த அப்ளிகேசனை பயன்படுத்தி மாணவர்கள் இலவசமாக தங்கள் பாடங்களை படித்து கொள்ளலாம். மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் விளக்கம் அளிக்கும் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளதாக பைஜூஸ் நிறுவன துணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் தெரிவித்துள்ளார்.
மற்றும் சில பிரபல கல்வி அப்ளிகேசன் சேவை நிறுவனங்களான Unacademy மற்றும் nCatalyst ஆகிய சில நிறுவனங்களும் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே கல்வி பயில சில ஆஃபர்களை அறிவித்துள்ளனர்.