இந்த உலகில் அளப்பெரிய காரியங்கள் அனைத்தும் உற்சாகமின்றி சாத்தியமானதில்லை.
உலகச் சரித்திரத்தில் காணப்படும் சாதனைகள் அனைத்தும் உற்சாகத்தின் வெற்றிச் சின்னங்கள் தான் என்று எமர்சன் கூறியது போல், ஒரு உற்சாகம் நம்மை ஓராயிரம் தூரம் அழைத்துச் செல்லும்.
பறவைகள் புதிய கண்டனத்திற்கு வலசை போகப் பயணமாகின்ற போது, உற்சாகமின்றி, அதன் இறக்கைகள் எப்படி கடலைத் தாண்டிப் பறக்க முடியும்?
ஒரு விலங்கு அடுத்த விலங்கை வேட்டையாடி உண்ணுகின்ற காடுகளில் ஒவ்வொரு நொடியையும், விழிப்புணர்வு மற்றும் உற்சாகமின்றி எப்படி விலங்குகள் வாழ்ந்திட முடியும்?
சொந்த தேசத்தைவிட்டு, அயல் தேசத்திற்குச் செல்கின்றவர் எப்படி உற்சாகமின்றி எப்படி உழைக்க முடியும்?
ஏழையாகப் பிறந்துவிட்டு,ஒரு நிறுவனத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்று ஆசையுள்ளவர் எப்படி, உற்சாகமின்றி தன் நாட்களை கடத்த முடியும்?
உற்சாகத்தின் வேர் நம் மனதில்தான் உள்ளது.
அது நம் மனதின் தன்மையைப் பொறுத்துதான் , நம் எண்ணங்களைப் பொறுத்துத்தான், என் ஆசையை அடைந்திடும் வழிகளைப் பொறுத்துத்தான் இந்த உற்சாகம் நமக்குள் வீரிட்டுக் கிளம்பி, நம்மை உத்வேகப் படுத்துகிறது.
என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை என்னிடம் இருப்பதெல்லாம் ஆர்வம் மட்டுமே என்று நோபல் விருது வென்ற ஆலர்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்.
நம்மிடம் சொத்துகள், கல்வி, உறவினர்கள் என எதுவுமே இல்லையென்றாலும்கூட, இந்த ஆர்வமும் உற்சாகமும் இருந்துவிட்டால், எதையும் நம்மால் சாதிக்க முடியுமென்பதற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளும் ஒரு சான்று.
விதைத்தவன் உறங்கட்டும் ஆனால், விதைகள் உறங்குவதில்லை என்று முன்னால் கியூபா அதிபர் பிடல் காஸ்டோ கூறியது போல், நாம் நமக்குள் விதைக்கின்ற சிறிய லட்சிய விதை என்பது எப்போதும் நம்மைத் தூங்கவிடாது.
ஓயாது உழைக்கச் செய்யும்!
பிறர் வந்து தான் நம்மை உற்சாகமூட்ட வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தால் காலம் பறந்தோடி விடும்! நம் போட்டியாளர்களும் நமக்கு முன்னாள் சென்று கொண்டிருப்பார்கள்.
முயலை , ஆமை ஜெயித்த கதையாகிவிடும்!
அதனால், உற்சாகத் தோணியில் இந்த உலகமெனும் கடலைக் கடக்க நாம் நாள் தோறும் முயற்சியெடுக்க வேண்டும்!
உற்சாகம் உடையவனின் நோக்கங்கள் தவறுவதில்லை என்று வால்மீகி கூறியது போல் நம் உற்சாகத்தால் பெரிய காரியங்களை சாதிக்க முடியும்!
இந்த வாழ்க்கை அதற்கு மேடை அமைத்துத் தருவதாகவும், உலகம் நல்வாய்ப்பு தரும் களமாக நாம் நினைத்துக் கொண்டால் தோல்விகள் கண்டு நாம் கவலைப்பட மாட்டோம்!
தோல்வியில் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டாலே அதுவும் ஒரு வெற்றிதான் என்று ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
வெற்றிபெறவும் சாதனையாளன் என்ற அடையாளத்தைப் பெற ஓடுகின்ற உலகில் எதுவும் நமக்கு எளிதில், அதுவும் நாமிருக்கும் இடத்திற்கே வந்து கிடைத்துவிடாது.
இந்த உலகில் எல்லாவற்றிற்கும் ஒரு விலையுள்ளதாகவே இருந்தாலும், அந்த விலையை நாம் தருவதற்கும் அப்பொருளை நாம் பெறுவதற்கும் நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ள முதலில் இந்த உற்சாகம் நமக்குள் உற்பத்தியாக வேண்டும்!
ஆயிரம் தோல்விகளைக் கண்டவனுக்குள் மீண்டும் உற்சாகம் ஊற்றெடுக்கவில்லை என்றால், அவனால் எப்படி வெற்றிச் சிகரத்தை அடைய முடியும்?
அதனால்தான் அவரவர் வீழ்ச்சிக்கு அவர்களே காரணம் என்று மாவீரர் நெப்போலியன் கூறினார்.
அதனால், வெற்றியென்பதை நாம் குறிக்கோளாகக் கொள்ளாமல் அதையொரு பயணமாகக் கொண்டியங்கும்போது, சினிமா தலைப்பைப் போன்று இப்பயணங்கள் முடிவதேயில்லை.
இப்பயணத்திற்குத் தேவையான எரிபொருளாக நம்மிடம் இருக்கும் உற்சாகமும் தீர்ந்துபோவதில்லை.
ஒருவேளை உற்சாகம் வற்றிப் போகும் போதெல்லாம் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், தன்னம்பிக்கை பேச்சாளர்களின் பேச்சுகளையும், சிந்தனையாளர்களின் அறிவுரைகளையும், வெற்றியாளர்களின் அறிவுரைகளையும், பெரியோர்களின் புத்திமதிகளையும் கேட்கின்றபோது, நம்மையும் அறியாமல் இழந்த உற்சாகத்தை நம்மால் மீண்டும் பேட்டர் கார் போன்று ரீ சார்ஜ் செய்ய முடியும்!
மின்மினிப் பூச்சிகள் சோர்ந்துகிடக்கும் போதல்ல. மாறாக அது பறக்கின்ற போதுதான் அழகிய ஒளியை கொடுக்கின்றது. அதுபோல் தொடர்ந்து முன்னேறிச் செல்ல நாமும் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நம்மிடம் உள்ள உற்சாகம் மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும்! நம்மையும் தொடர்ந்து இயங்கச் செய்யும்!
நாம் நினைத்ததைச் சாதிக்கவும் முடியும்!
#சினோஜ்