மதுரையில் தேர்தலை நிறுத்த வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் கே கே ரமேஷ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது உச்சகட்ட பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மதுரை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சு வெங்கடேசன், அதிமுக கூட்டணி வேட்பாளர் ராஜ்சத்யன் மற்றும் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதே தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான கே கே ரமேஷ் மதுரைத் தொகுதியில் தேர்தலை நிறுத்தவேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் ‘ அதிமுக சார்பில் சௌராஷ்ட்ரா இன மக்களுக்கான கூட்டம் சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த மக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அதோடு மட்டுமில்லாமல் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணமும் கொடுக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மதுரை தொகுதியில் தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை. அதனால் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சித்திரை திருவிழாவைக் காரணம் காட்டி மதுரைத் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.