ஒரே தொகுதிகளை கேட்டு பாமகவும், தேமுதிகவும் அடம் பிடித்து வருவதால் அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
மக்களவைத் தேர்தலில் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு, கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க, அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முடியாது என்றும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக கேட்கும் நான்கு தொகுதிகளை ஒதுக்குவதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் பாமகவும் 10 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவியும் வழங்க வேண்டும் என்று அதிமுகவிடம் வலியுறுத்தியது. அதற்கு அதிமுக, 7 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்வதாகவும், மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை பதவி வழங்க முடியாத நிலையில், கூடுதலாக ஒரு தொகுதியை பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் வழங்குவதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், விழுப்புரம், கடலூர் தொகுதிகளில் கணிசமான வாக்குகள் உள்ளதால், அந்த இரண்டு தொகுதிகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாமகவும் வலியுறுத்தி உள்ளது. இதனால் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
பாமக, தேமுதிகவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.