Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராதிகா VS விஜய பிரபாகரன்..! வெற்றி வாய்ப்பு யாருக்கு..! விருதுநகர் கள நிலவரம்..!!

Advertiesment
Virudunagar Canditate

Senthil Velan

, வியாழன், 4 ஏப்ரல் 2024 (11:35 IST)
மக்களவைத் தேர்தலை நாடே எதிர்நோக்கியுள்ள நிலையில் நான்கு முனை போட்டி நிலவும் ஸ்டார் தொகுதியான விருதுநகரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை பார்க்கலாம்.
 
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர், அருப்புக்கோட்டையில் திமுக, சாத்தூரில் மதிமுக, சிவகாசியில் காங்கிரஸ், திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் அதிமுக வெற்றி பெற்றன.
 
2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் கண்டன. அப்போது, அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனும், திமுக வேட்பாளரான மதுரையைச் சேர்ந்த ரத்தினவேலுவும் போட்டியிட்டனர். இதில், அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.
 
2019-ல் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தேமுதிக வேட்பாளர் 3.50 லட்சம் வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவரைவிட 1.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
 
தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா, நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் உட்பட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
 
Virudunagar Canditate
விருதுநகர் தொகுதியில் 2009, 2019 ஆகிய 2 முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார். தொகுதியில் பல்வேறு இடங்களில் தேர்தல் பணிமனைகளை திறந்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். கடந்த முறை தான் செய்த பணிகளை 400 சாதனைகள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
 
Virudunagar Canditate
தேமுதிகவின் நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் மகன் என்ற அடையாளத்தோடு களமிறங்கியிருக்கும் விஜய பிரபாகரன், கூட்டணி கட்சியான அதிமுகவினரின் உதவியோடு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் இத்தொகுதிக்குள் வருவதால் கூடுதல் உற்சாகத்தோடு வாக்குகளை சேகரித்து வருகிறார்.
 
Virudunagar Canditate
பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா, அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதால் வாக்காளர்களை எளிதில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். பல்வேறு சமூகத் தலைவர்களையும், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளையும், பள்ளிவாசல்களுக்குச் சென்று ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து வாக்கு சேகரிப்பதோடு மக்களை சந்தித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு உறுதுணையாக அவரது கணவரும், நடிகருமான சரத்குமாரும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார். 
 
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கவுசிக், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரத்துக்குப் பின்பு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். நான்கு முனை போட்டி நிலவி வந்தாலும், மாணிக்கம் தாகூர், ராதிகா, விஜய பிரபாகரன் ஆகியோருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
 
Virudunagar Canditate
பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர் ராதிகாவுக்கு விருதுநகர் தொகுதியில் பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் நடிகரும் அவரது கணவருமான சரத்குமார், தனது சமத்துவ மக்கள் கட்சியை அண்மையில் பாஜகவில் இணைத்தார். அக்கட்சியின் தொண்டர்களிடம் விருப்பம் கேட்காமலேயே தனது குடும்பத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் சரத்குமார் பாஜகவில் கட்சியை இணைத்ததாக சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்கள் குமுறுகின்றனர். இதன் காரணமாக சமத்துவ மக்கள் கட்சியில் இருந்த தொண்டர்கள் நடிகை ராதிகாவுக்கு வாக்களிப்பார்களா என்பதே சந்தேகம்தான். 
 
சிட்டிங் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் இடையே தற்போது நேரடி போட்டி நிலவுகிறது. இருப்பினும் விருதுநகர் தொகுதியில்  விஜய பிரபாகரன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அந்த தொகுதி மக்களின் கருத்தாக உள்ளது. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது ஆரம்பத்தில் அவருக்கு இருந்த வரவேற்பு, அவரது மகன் விஜய பிரபாகரனுக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது.
 
Virudunagar Canditate
விஜயகாந்த் மறைந்த போது, லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, கண்ணீர் விட்டு கதறியதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவர் செய்த மக்கள் பணியை தற்போதும் போற்றுகின்றனர்.  மேலும் அவரது நினைவிடத்தில் இன்று வரை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் மீது மக்கள் வைத்துள்ள மரியாதையே விஜய பிரபாகரனுக்கு ஓட்டாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் கடந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக இரண்டாம் இடத்தைப் பிடித்த நிலையில், கேப்டனின் மகன், அதிமுக கூட்டணி வேட்பாளர் என்ற அடிப்படையில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனுக்கே அதிக வாய்ப்புள்ளது.  விருதுநகரில் விஜய பிரபாகரனின் கை ஓங்குமா? தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்று மக்களவையில் விஜய பிரபாகரன் குரல் ஒலிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக எங்களை அச்சுறுத்தியது, ஆனாலும் தைரியமான முடிவெடுத்தோம்: பிரேமலதா விஜயகாந்த்