நாடாளுமன்ற தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை திருச்சி தேர்தல் பணிமனை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கூடங்குளம் அணுமின் நிலையம் மூடல் உள்ளிட்ட 74 வாக்குறுதிகளை வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கே முன்மாதிரியாக எடுத்துச் செல்கிறார் என தெரிவித்தார்.
திருச்சி தொகுதியில் மதிமுக வெற்றிக்காக பணியாற்றி வரும் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார்.