சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தர்மபுரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தாரா என தெரிவித்தார்.
மாநில அரசால் சர்வே தான் எடுக்க முடியும், சென்சஸ் எடுக்க முடியாது என்பது ராமதாஸுக்கு தெரியாதா என்றும் பாமக வலியுறுத்தும் ஒரு திட்டத்துக்கு கூட ஆதரவு தெரிவிக்காத கட்சி பாஜக என்பது ராமதாசுக்கு தெரியாதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக திமுக போராடியது என்றும் எந்த சமூகமாக இருந்தாலும் அந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காக சமூக நீதித் திட்டங்களை தீட்டி தருகிறது திமுக அரசு என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுகவின் திட்டங்களால் தமிழகத்தில் உள்ள குடும்பங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பயன் அடைகின்றன என குறிப்பிட்ட முதல்வர், கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பாஜக கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் இரண்டு மடங்கு நிதி கொடுப்பதாகவும், தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி உயர்வால் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் முடங்கி உள்ளதாகவும் ஸ்டாலின் குற்றச்சாட்டினர்.
ரபேல் ஊழல், தேர்தல் பத்திர ஊழல் போன்றவற்றிற்கு தேர்தலுக்குப் பிறகு பாஜக பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று அவர் கூறினார். மாநிலங்களை அழிக்க பிரதமர் துடிப்பதாகவும், மாநிலங்களுக்கு அதிகாரமும் இருக்கக் கூடாது என்று நினைப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தேர்தலில் நின்றால் தோற்கடிப்பார்கள் என்பதால் நிர்மலா சீதாராமன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவர் விமர்சித்தார்.
கள்ளக் கூட்டணி வைத்துள்ள பாஜக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் நடைபெற உள்ள தேர்தலில் தோல்வியடையும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தமிழ்நாட்டின் துரோகி தான் பழனிசாமி என்றும் கடுமையாக சாடினார்.