தமிழகத்தில் பாஜக தோல்வியடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தமிழிசை தெரிவித்ததாவது, தூத்துக்குடியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் வேட்பாளராக இங்கு வந்தேன். இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன்.
எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த கால அரசியலை கொண்டு பார்க்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்தவர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் என்பதை மறந்து விடக்கூடாது. எது எப்படி இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை வாழ்த்துகிறேன்.
மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகம், கேரளாவில் தோல்விக்கான காரணம் தொடர் எதிர் பிரசாரம்தான். பிரதமர் மோடிக்கு பாரத தேசம் முழுவதும் வரவேற்பு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று எதிர்ப்பை காண்பித்தனர்.
நல்ல திட்டங்களை மற்ற மாநில மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதே நல்ல திட்டங்கள் தமிழகத்தில் தவறான திட்டங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டது. நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்று ஆதங்கம் இல்லை. ஆனால் உரிமையுடன் தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என நினைத்து இருந்து தற்போது அது முடியாமல் போனது என தெரிவித்தார்.