உலக பொருளாதார மந்த நிலையால் பல நாடுகள் பணவீக்கத்தை சந்தித்து வருகின்றன. இந்தியாவும் உலக பங்குசந்தை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது. பெரும் நிறுவனங்கள் முன் ஜாக்கிரதையாக தங்கத்தின் மேல் முதலீடு செய்ய தொடங்கியுள்ளதால் அதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலையை கட்டுக்குள் வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளது மத்திய அரசு. ஒற்றை நிறுவன விற்பனை பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் சில தளர்வுகளை அளிப்பதன் மூலம் அந்நிய முதலீடு அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.
தற்போது பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் சந்தை பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி விற்பனை தளங்கள் அமைக்காமல் ஆன்லைன் விற்பனைகளில் ஈடுபடுவது முதலில் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் தங்கள் விற்பனை தளங்களை அமைத்து, அதற்குரிய சான்றிதழ்களை பெற்றிருத்தல் ஆன்லைன் விற்பனைக்கு அவசியம். தற்போது இந்த கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு செய்துள்ளனர். தனிப்பட்ட நிறுவன வளாகங்கள் இல்லாமலேயே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்க இருக்கிறது மத்திய அரசு.
இதனால் உள்நாட்டு பரிவர்த்தனைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாறுமே ஒழிய அரசுக்கு கிடைக்கும் குறைந்த வருவாய் எவ்வகையில் பொருளாதார மந்த நிலையை போக்க உதவும் என பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.