மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த 'மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தின் ரீ - மேக் தான் நிமிர்.
உதயநிதி, பார்வதி நாயர், நமீதா பிரமோத் ஆகியோர் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில், ரோனி ஆர் ரபீல், தர்புகா சிவா, அஜானீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைப்பில் சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு ஆகிய நட்சத்திர பட்டாளத்தோடு வெளியாகியிருக்கும் படம் நிமிர்.
தென்காசியில் ஒரு சிறிய ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்திக்கொண்டிருக்கும் நேஷனல் செல்வத்தை (உதயநிதி) ஒரு சிறிய சண்டையில், பலர் முன்பு அடித்துத் துவைத்துவிடுகிறான் வெள்ளையப்பன் (சமுத்திரக்கனி). அவனைத் திரும்பவும் அடித்து வீழ்த்தும்வரை தான் செருப்பு அணியப்போவதில்லை என சபதமேற்கிறான் செல்வம்.
இதற்கிடையில் தனது வாடிக்கையாளராக அறிமுகமாகும் மலர்விழியைக் (நமீதா) காதலிக்க ஆரம்பிக்கிறான் செல்வம். அந்த மலர்விழியின் அண்ணன்தான் வெள்ளையப்பன் என்று பிறகு தெரியவருகிறது. சில காட்சிகளை விட்டுவிட்டால், 'மகேஷிண்ட பிரதிகாரம்' படம் அப்படியே காட்சிக்குக் காட்சி, வசனத்திற்கு வசனம் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது.
கேரளாவில் நடக்கும் கதையை, அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு ஊருக்குக் கொண்டுவந்துவிட்டார் பிரியதர்ஷன். 'மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தில் இடுக்கி மாவட்டத்தின் அழகு, சில காட்சிகளில் சி.பி.எம். ஊர்வலங்கள் என கேரளாவுக்கே உரிய சில அம்சங்கள் துலக்கமாகக் காட்டப்பட்டிருக்கும்.
ஆனால், மலையாள இயக்குனர்கள், தமிழ்த் திரைப்படங்களை இயக்கும்போது இதுபோன்ற நுணுக்கமான தமிழ் அம்சங்களைப் பார்க்க முடியாது. எல்லாம் பொதுவானதாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். மற்றபடி, பெரிதாக உறுத்தாத வகையில் படத்தை நகர்த்திச்செல்கிறார் பிரியதர்ஷன்.
படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரத்திற்கும் தமிழில் நன்றாக அறிமுகமான நடிகர்களைப் பயன்படுத்தியிருப்பது, எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத வசனங்களின் மூலம் சிரிக்கவைப்பது ஆகியவை படத்தின் பலங்களில் சில.
பெரிதாக ஹீரோயிசம் செய்யவாய்ப்பில்லாத, அடக்கிவாசிக்க வேண்டிய கதாநாயகன் பாத்திரம் இது. மகேஷிண்ட பிரதிகாரம் படத்தில் ஃபஹத் பாசில் செய்த பாத்திரத்தில் பெரிய உறுத்தல் இன்றி நடித்திருக்கிறார் உதயநிதி.
கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குனர் மகேந்திரன், பாத்திரத்திற்கு ரொம்பவுமே பொருந்துகிறார். நாயகிககளான பார்வதி நாயர், நமீதா பிரமோத், குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ். பாஸ்கர், சண்முகராஜா என எல்லோருமே பாத்திரங்களோடு பொருந்திப்போகிறார்கள்.
படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் எல்லாமே ரசிக்கத்தக்க ரகம். குறிப்பாக, அஜானீஷின் இசையில் தாமரையின் வரிகளில் வரும் நெஞ்சில் மாமழை பாடல் முதல்முறை கேட்கும்போது மனதைக் கவரும்.
மலையாள ஒரிஜினலை பார்த்திருந்தாலும் பார்த்திருக்காவிட்டாலும் ஒரு முறை பார்த்து ரசிக்கதக்க படம் நிமிர்.