Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தானா சேர்ந்த கூட்டம்: திரைவிமர்சனம்

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (13:35 IST)
சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெறுமா? என்பதை பார்ப்போம்

சிபிஐ அலுவலகத்தில் பியூனாக வேலைபார்க்கும் தந்தை தம்பி ராமையாவின் அதே அலுவலகத்தில் சிபிஐ அதிகாரியாக வேண்டும் என்பதே சூர்யாவின் ஆசை. அதேபோல் சூர்யாவின் நண்பர் கலையரசனுக்கு போலீஸ் ஆகவேண்டும் என்பது கனவு. ஆனால் இருவருக்கும் வேலை கிடைக்க தடையாக இருப்பது லஞ்சம். போலீஸ் வேலை கிடைக்காததால் விரக்தியில் கலையரசன் தற்கொலை செய்து கொள்ள, திறமை இருந்தும் தனக்கு சூர்யாவுக்கு வேலை கொடுக்க மறுக்கிறார் சிபிஐ உயரதிகாரி சுரேஷ்மேனன்

நண்பனின் மரணத்திற்கும், தனக்கு வேலை கொடுக்காத சுரேஷ் மேனனுக்கு பாடம்  புகட்ட சூர்யா எடுக்கும் அவதாரம் தான் போலி சிபிஐ அதிகாரி. ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் குழுவினரை வைத்து கொண்டு அமைச்சர்கள் முதல் பெரிய கடைகள் வரை சிபிஐ என்று கூறி போலி ரெய்டு நடத்தி கதிகலங்க வைக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடையும் உண்மையான சிபிஐ அதிகாரிகள், உயரதிகாரி கார்த்திக்குடன் களமிறங்கி சூர்யா டீமை பிடிக்க முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? சூர்யாவின் கனவு நனவாகியதா? என்பதே மீதிக்கதை

சிபிஐ அதிகாரி வேடத்திற்கு சூர்யா கச்சிதமாக பொருந்தாவிட்டாலும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகரமான நடிப்பின் மூலம் குறையை நிவர்த்தி செய்கிறார். உயரம் பெரிதல்ல, உயர்வான எண்ணமே முக்கியம் என்று வசனம் பேசுகிறார். கீர்த்திசுரேஷூடன் காதல் செய்கிறார். விதவிதமாக சிபிஐ ரெய்டு நடத்தி அதிர வைக்கின்றார். மொத்தத்தில் சூர்யாவின் மீதிருந்த கறாரான போலீஸ் இமேஜ்ஜை உடைத்துள்ளார். கத்தி கத்தி வசனம் பேசாமல் சூர்யாவின் இன்னொரு பரிணாம நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம்.

பெரிய ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினிக்கு என்ன வேலையோ அதே வேலைதான் இந்த படத்தில் கீர்த்திசுரேஷூக்கு. சூர்யாவுடன் பாடலுக்கு நடனமாடி ஒருசில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்.

ரம்யாகிருஷ்ணன் உண்மையான சிபிஐ அதிகாரி போலவே மிடுக்கான நடிப்பை கொடுத்துள்ளார். கார்த்திக்கின் முகத்தில் வயது தெரிந்தாலும், அவரது நடிப்பில் இன்னும் இளமை துள்ளுகிறது. சுரேஷ் மேனனின் நடிப்பு ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.

மேலும் செந்தில், சத்யன், ஆன்ந்த்ராஜ், நந்தா, கலையரசன், ஆர்.ஜே பாலாஜி, யோகிபாபு, தம்பிராமையா என ஒரு நட்சத்திர கூட்டத்தையே படத்தில் இணைத்து அனைவரும் மனதில் நிற்கும் வகையிலான காட்சிகளை அமைத்துள்ளார் விக்னேஷ் சிவன்

கீர்த்திசுரேஷின் காதல் காட்சிகள் தவிர படத்தில் தேவையில்லாத காட்சிகள் என்று எதையும் கூற முடியாத அளவில் ஒரு கச்சிதமான கமர்ஷியல் படத்தை கொஞ்சம் சீரியஸ் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். திரைக்கதையில் ஆங்காங்கே டுவிஸ்ட் வைத்திருப்பது சிறப்பு.

அனிருத்தின் இசையில் 'சொடக்கு மேல சொடக்கு' பாடலில் தியேட்டரே அதிர்கிறது. பீலா பீலா பாடல் படத்திற்கு தேவையில்லாமல் புகுத்தப்பட்டுள்ளது. பின்னணி இசையில் அனிருத் இந்த படத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது தெரிகிறது. குறிப்பாக ரெய்டு காட்சிகளில் பின்னணி இசை பிரமாதம்

தினேஷின் கேமிரா கலர்கலராக காட்சிகளை படம் பிடித்துள்ளது. ஸ்ரீகர் பிரசாத்தின் கச்சிதமான எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பை உயர்த்தியுள்ளது.

மொத்தத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பொங்கல் விருந்து என்றே கூறலாம்,.

ரேட்டிங்: 3.25/5

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments