சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் இந்த தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக சமீபத்தில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்ததை அடுத்து கேரள மாநிலம் முழுவதும் பாஜகவினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதனையடுத்து சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். நிலக்கல், பம்பை, பத்தினம்திட்டா, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சோதனை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சபரிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளதற்கு ஐயப்ப பக்தர்களும், பாஜகவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.