சபரிமலைக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை போலீஸார் பக்தர்கள் செல்லும் பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர்.
சபரிமலையில் நடை திறக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பிற்கு பின்னரே பக்தர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஐயப்பனுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி இன்று காலையில் தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றார். அவருடன் சில கட்சி ஆட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் போலீஸார் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை பம்பை அருகே தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சரை மட்டுமே அனுமதிக்க முடியும் என போலீஸார் கூறினர்.
அதுமட்டுமில்லாமல் அவரை காரில் செல்ல அனுமதிக்காத போலீஸார் பேருந்தில் மட்டும்தான் செல்ல வேண்டும் என கூறியதால் அவர் தரிசனம் செய்ய சக பக்தர்களோடு பேருந்தில் சென்றார்.