சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் வழிபடுவதற்கு ஐயப்ப பக்தர்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு கேரள போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சமீபத்தில் இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசனம் செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் சபரிமலையில் உள்ள வாவர் மசூதியில் நுழைய முயன்ற பெண்களை அதே கேரள போலீசார் கைது செய்துள்ளனர். சபரிமலையில் உள்ள வாவர் என்ற மசூதியில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பள்ளி வாசலுக்குள் செல்ல தமிழகத்தில் இருந்து சில பெண்கள் வருவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பள்ளி வாசலுக்குள் நுழைய வந்த தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுசீலாதேவி, காந்திமதி, ரேவதி, திருப்பதி, முருகசாமி ஆகியோர் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து கூறிய இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத், 'கேரள போலீசார் ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வரும் அதே போலீசார் மசூதிக்கு செல்லும் பெண்களை கைது செய்துள்ளனர். இஸ்லாமியர்களை புண்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல, அதே நடவடிக்கையை ஐயப்பன் கோவிலிலும் எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்று கூறியுள்ளார்