கேரளாவில் பொதுமக்களால் தாக்கப்பட்டு மரணமடைந்த ஆதிவாசி இளைஞர் மதுவின் உடலில் 50 காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில், கையில் அரிசி மூட்டையோடு நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்த பொதுமக்கள் சராமரியாக அடித்து உதைத்து அவரை போலீசாரிடம் ஒப்படத்தனர். ஆனால், போலீஸ் ஜீப்பிலேயே அவர் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
விசாரணையில், அவர் அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது(27) என்பதும், வயிற்றுப்பசிக்காக சிறு சிறு திருட்டை அவர் செய்து வந்தார் எனவும் தெரிய வந்தது. அவரை கட்டி வைத்து அடிக்கும் போது சிலர் செல்பி புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் புயலை கிளப்பியது. சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். எனவே, இந்த விவகாரத்தை திசை திருப்ப முயன்ற சிலர், மதுவிற்கு காதல் தோல்வி. எனவேதான் காட்டில் வாழ்ந்து வந்தார். போலீஸ் வாகனத்தில் ஏறும் போது மது தலையில் இடித்துகொண்டார் என்றெல்லாம் கதை கட்டத் தொடங்கினர்.
இந்நிலையில், அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், மதுவின் உடலில் மொத்தம் 50 காயங்கள் இருந்தன எனவும், அதில் 20 காயங்கள் அவர் இறப்பதற்கு முதல் நாள் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவரை தலையில் பலத்த காயம் உள்ளது. இரும்பு தடியால் அவர் தாக்கப்பட்டிருக்கலாம். அவர் மரணமடைய அந்த காயம்தான் முக்கிய காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.