உத்தரபிரதேசத்தில் பெய்துகொண்டிருக்கும் கனமழையின் காரணாமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தற்பொழுது அங்கு கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இதனால் பல இடங்கள் வெள்ளக்காடுகளாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதுவரை இந்த கனமழையால் 70 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வீடுகளை இழந்து தவிப்போருக்கு அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டிருக்கிறார்.