ராஜஸ்தான் மாநில ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது பாட்டி ஒருவர் ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. சிகார் மாவட்டத்தில் நீம் கா தானா உபக் கோட்டத்தின் கீழ் வரும் புராணவாஸ் கிராமப் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ருசிகரமான முடிவு வெளியாகியுள்ளது.
அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு மொத்தம் 11 பேர் போட்டியிட்டனர். அதில் 97 வயது மூதாட்டியான வித்யா தேவி என்பவரும் ஒருவர். இந்நிலையில் நேற்று முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் வித்யா தேவி அதிகபட்சமாக 803 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் மிக அதிக வயதில் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் நிகழ்த்தியுள்ளார். அவரின் வெற்றியை அந்த ஊர்மக்கள் கொண்டாடி வருகின்றனர்.