இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தின் மூலமாக சுமார் 45 ஆயிரம் பேருக்கு ராணுவப்பணி வழங்கப்பட உள்ளது.
இந்திய ராணுவத்தின் முப்படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்டவற்றில் பணிபுரிய தீரமிக்க வீரர்கள், வீராங்கனைகள் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பொதுவாக ராணுவத்திற்கு பணிபுரிய செல்பவர்கள் குறுகிய காலமாக 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் ஓய்வு பெறும் வரையிலும் பணிபுரியலாம் என்ற நடைமுறையே உள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு “அக்னிபாத்” என்ற குறுகிய கால 4 ஆண்டுகள் ராணுவ சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலமாக 45 ஆயிரம் இளைஞர்கள் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும்.
இந்த அக்னிபாத் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் உடற்தகுதி தேர்விற்கு பிறகு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படுவர். 4 ஆண்டுகால பணிக்காலம் முடிந்ததும் அதில் சிறப்பாக செயலாற்றிய 25 சதவீதம் பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.