சமீப காலமாக இந்தியாவின் தேசிய மொழி குறித்த விவாதங்கள், சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் மொழி பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
இந்தியாவின் தேசிய மொழி இந்தி என வடமாநில அரசியல் பிரபலங்கள் பலரும் பேசி வரும் நிலையில் தென்னிந்தியாவில் அதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் அஜய் தேவ்கன் இந்தி குறித்து பேசியதும், அதற்கு கன்னட நடிகர் கிச்சா சுதீப் எதிர்வினையாற்றியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதை தொடர்ந்து தமிழ் சினிமா உலகிலும் பலர் இந்திக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் குஜராத்தில் நடைபெற்ற தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியபோது “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். எந்த மொழியும் தாழ்ந்தது அல்ல.
ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் இருப்பதால் எந்த மொழியையும் இந்தி அல்லது ஆங்கிலத்தை விட தாழ்ந்ததாக கருத முடியாது. சில மாநிலங்கள் புதிய தேசியக் கல்விக்கொள்கையை ஏற்கவில்லை என்பதை அறிவோம். பாடத்திட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களும் பாங்காற்ற வேண்டும்” என்று பேசியுள்ளார்.