பெங்களூரில் பைக்கில் சென்ற இளம் பெண்ணை மறித்து இந்திய நாகரிகப்படி ஆடை அணியுங்கள் என ஆசாமி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
பெங்களூரில் கடந்த 3ம் தேதி இரவு அபினவ் முகர்ஜி என்ற நபர் அவரது தோழி சிம்ரன் கபூருடன் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதே சாலையில் சென்று கொண்டிருந்த ஆசாமி ஒருவர் சிம்ரனை பார்த்து “இப்படியா ட்ரெஸ் பண்ணுவாங்க.. இந்திய நாகரிகப்படி ட்ரெஸ் பண்ணுங்க” என கூறியிருக்கிறார். சிம்ரன் மேலே ஒரு டீசர்ட்டும், கீழே ஷார்ட்ஸும் அணிந்திருந்தார். அந்த ஆசாமியை வழிமறித்த அபினவ் மற்றும் சிம்ரன் அவரிடம் வரிசையாக கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.
அப்னவ் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த ஆசாமி பேசும்போது “இந்திய சட்டத்திட்டங்களை மதியுங்கள்” என கூறுகிறார். அதற்கு கேள்வியெழுப்பிய அபினவ் “இந்திய சட்டத்தில் இப்படிதான் ட்ரெஸ் பண்ண வேண்டும் என சட்டம் இருக்கா?” என கேள்வியெழுப்பினார். மேலும் மற்றவர்கள் அணியும் உடை குறித்து பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் கேள்வியெழுப்பினார். மேலும் அந்த ஆசாமி பேண்ட், சட்டை அணிந்திருப்பதை குறிப்பிட்டு “நீங்கள் அணிந்திருப்பது இந்தியாவின் கலாச்சார உடையா?” எனவும் கேள்வியெழுப்பினார்.
ஆனாலும் அந்த ஆசாமி தொடர்ந்து இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுங்கள் என்றே சொல்லிக்கொண்டிருந்தார். இந்த வீடியோவை அபினவ் மற்றும் சிம்ரன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதற்கு சிம்ரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கூட பல்வேறு கருத்துகளை பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.