சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அதை நிறுத்துமாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு சமீபமாக தீர்க்கமாக அறிவித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் கேரள அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு தடை விதிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேரள அணை விவகாரத்தில் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. எந்த கட்டுமானமாக இருந்தாலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உரிய அனுமதி பெற்ற பின்னர்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும், அப்படி உரிய அனுமதி பெறப்பட்டிருந்தால் அதனை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்றும், அதுவரை சிலந்தி ஆற்றில் எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.