100 ரூபாய் எடுக்க போனால் 500 ரூபாய் வாரி வழங்கும் ஏடிஎம்-ஐ நோக்கி பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் என்ற பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில் 100 ரூபாய் எடுக்க சென்ற ஒருவருக்கு 500 ரூபாய் தாள் வரவே அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பரவிய நிலையில் எல்லோரும் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு அந்த மிஷினை நோக்கி வந்தனர்.
இதனால் அந்த ஏடிஎம் முன் கூட்டம் அதிகமானதை அடுத்து வங்கி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து உடனே விசாரணை செய்தது. அப்போது ஏடிஎம் எந்திரத்தை திறந்து பார்த்தபோது 100 ரூபாய் தாள்கள் வைக்க வேண்டிய இடத்தில் கவனக்குறைவாக 500 ரூபாய் தாள்கள் வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனால்தான் 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வந்துள்ளது. இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து வாடிக்கையாளர் திருப்பி கொடுக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருப்பி கொடுக்காத வாடிக்கையாளரின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.