அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று பெங்களூரில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் இன்று வாக்கு செலுத்துபவர்களுக்கு உணவு இலவசம் என்று பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஓட்டல் நிறுவனம் மற்றும் வேறு சில நிறுவனங்களும் ஓட்டு போட வருவதற்கு சில இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதால் இன்று பெங்களூரில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளதை அடுத்து வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் நிசர்கா கிராண்ட் என்ற ஹோட்டல் நிறுவனம் வாக்கு செலுத்தி விட்டு விரலில் உள்ள மையை காட்டினால் வெண்ணெய் தோசை, நெய் சோறு, குளிர்பானங்கள் இலவசம் என்று அறிவித்துள்ளது
அதேபோல் இன்னொரு நிறுவனம் ஓட்டு போடுபவர்களுக்கு இலவச பீர் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. அது மட்டும் இன்றி பப் நிறுவனம் ஒன்றும் கட்டணத்தில் சில சலுகைகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் ரேபிடோ நிறுவனம் வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகள் முதியவர்களுக்கு இலவச பயணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பெங்களூரில் உள்ள பல நிறுவனங்கள் வாக்கு செலுத்துபவர்களுக்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை அடுத்து பெங்களூரில் 100% வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.