வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் கூட்டணியிலிருந்து விலகுவோம் என ஆர்எல்பி கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ராஜஸ்தானிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உரிமைகளுக்காக விவசாயிகள் போராட அனுமதியுண்டு என கூறியுள்ள முதல்வர் அசோக் கெலாட் அமைதியான முறையில் போராடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தானில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்ட களத்தில் பேசிய ஆர்எல்பி கட்சி தலைவர் ஹனுமான் பெனிவால் “மத்திய அரசின் விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. நாங்களும் விவசாயிகள் மகன்கள்தான். மத்திய பாஜக அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றும் முன்னர் விவசாய அமைப்புகளையோ, எங்களையோ கலந்து ஆலோசிக்கவில்லை. இந்த வரைவு மசோதாக்களை வடிவமைத்தது யார் என்றே தெரியாது. எனவே அரசு சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக முடிவெடுக்காத பட்சத்தில் பாஜகவின் கூட்டணியிலிருந்து நாங்கள் விலகுவோம். நான் எனது எம்.பி பதவியை ராஜினாமே செய்வேன்” என கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாஜக கூட்டணி கட்சியே குரல் கொடுத்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.