அஸ்ஸாமில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்பகுதியின் எம்.எல்.ஏ ஒருவர், உணவு சமைத்து விநியோகம் செய்து வரும் செய்தி மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில், பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அஸ்ஸாமின் அம்தப் தொகுதியின், எம்.எல்.ஏ மிரினால் சாய்கியா, தனது சொந்த செலவில் அவரே உணவு தயாரித்து, படகில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்துள்ளார். மேலும் உணவு சமைப்பதற்காகவே ஒரு வாகனத்தை வாங்கி, அதை ”மொபைல் கிட்சனாக” அமைத்துள்ளார். அந்த வாகனம் மூலம் நடமாடும் மருத்துவ முகாமையும் அமைத்துள்ளார்.
இது குறித்து பாஜக எம்.எல்.ஏ. மிரினால் சாய்கியா, ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக ஒரு வாகனம் வாங்கினேன். மேலும் சொந்த செலவில் நானே உணவு தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்தேன்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து பலர், தாமாக முன்வந்து உதவி செய்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
மேலும் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு உணவு விநியோகம் செய்துள்ளதாகவும், தான் எம்.எல்.ஏ பதவிக்கு வருவதற்கு முன்பே இவ்வாறு செய்துள்ளதாகவும் மிரினால் சாய்கியா உணர்ச்சி பொங்க கூறுகிறார். தேர்தல் சமயத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் தொகுதி பக்கமே எட்டிப்பார்க்காத எம்.எல்.ஏக்களுக்கு மத்தியில், மிரினால் சாய்கியா-வின் இந்த முயற்சியை வியப்புடன் பலர் பாராட்டி வருகின்றனர்.