இந்தியாவில் குடியரசு தலைவர், பிரதமர் பயணிக்க பிரத்யேக விமானம் வாங்கப்பட்டது குறித்து காங்கிரஸ் விமர்சித்துள்ள நிலையில் பாஜக பதிலளித்துள்ளது.
இந்தியாவின் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோர் பயணிக்க அதிநவீன வசதிகளுடன் கூடிய போயிங் ரக விமானங்கள் இரண்டு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், முதல் விமானம் சமீபத்தில் இந்தியா வந்தடைந்தது. இந்த விமானம் அமெரிக்க அதிபர் பயணிக்கும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. இதற்கு ஏர் இந்தியா ஒன் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து பஞ்சாபில் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, மக்கள் பிரச்சினைகளை விடுத்து பிரதமர் விமானம் வாங்குவதில் ஆயிரக்கணக்கில் பணத்தை வீணடித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள பாஜக “ஆயிரம் கோடி செலவில் பிரதமர், ஜனாதிபதி பயணிக்க விமானம் வாங்கும் திட்டம் கடந்த 2011 காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக 2012ல் அப்போதைய அமைச்சரவை குழு 10 முறை கூட்டம் நடத்தி முடிவெடுத்தது” என கூறியுள்ளது.