பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் பகுதியில், இந்திய எல்லையை தாண்டி வர முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு பாகிஸ்தான் நபர் இந்திய எல்லையை கடக்க முயன்ற போது, BSF வீரர்கள் எச்சரிக்கையின்றி அந்த நபரை சுட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபரின் உடல் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, இந்திய ராணுவம் மே 7ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இலக்காக்கி தாக்கியது.
இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவமும் எல்லையில் தீவிர அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.
மத்திய உள்துறை, எல்லையில் சந்தேகப்படும் நபர்களை எச்சரிக்காமல் நேரடியாக சுட உத்தரவு வழங்கியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. அந்த அடிப்படையில் தான் நேற்று பஞ்சாப் எல்லையில் எந்தவித எச்சரிக்கையும் இன்று பாகிஸ்தான் நபர் சுட்டு கொல்லப்பட்டார். அவர் தீவிரவாதியா? அல்லது பாகிஸ்தான் ராணுவ வீரரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.