நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது மற்றும் தேர்வில் நேரமிழந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நீட் மறுதேர்வு நடத்த கோரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 30-க்கும் அதிகமான மனுக்கள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து விசாரிக்குமாறு தேசிய தேர்வு முகமைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒட்டுமொத்த நபர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை தெரிவித்தார்.
நீட் தேர்வில் சுமார் ஒரு லட்சத்து 8000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற உறுதியான தகவல் கிடைத்த பிறகுதான் முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. எனவே, நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.