திருப்பதி தரிசன டிக்கெட்டை 65 ஆயிரம் வாங்கிக் கொண்டு கொடுத்ததாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பெங்களூரை சேர்ந்த குடும்பம் விஐபி தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்த நிலையில், அவர்கள் வைத்த டிக்கெட்டை பார்த்த ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனை அடுத்து தேவஸ்தான ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தேவஸ்தான அதிகாரிகள் இது குறித்து விஐபி டிக்கெட் வைத்திருந்த குடும்பத்தினரை விசாரித்தனர். அப்போது அவர்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாயண்ணா ஜாக்கியா கானம் என்பவர் தங்களிடம் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு விஐபி தரிசன டிக்கெட் கொடுத்ததாக கூறினர்.
இதனை அடுத்து, தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜாக்கியா உள்பட மூன்று பேர் மீது திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஜாக்கியா பணம் வாங்கினாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இதற்கு முன் அவர் பல பக்தர்களுக்கு இதே போன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட இருப்பதாக திருமலை போலீசார் தெரிவித்துள்ளனர்.